மறுரூபமாகுதல்-லெந்துக் கால தியானம் – 10

Published by Holy Way on


உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

ரோமர் 12:2 …

மனம் புதிதாக வேண்டும். 2கொரி4:16 எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.

  1. 1. புறம்பான மனிதன்2.
  2. உள்ளான மனிதன்

என்று காண்கிறோம்.
மேலும், கொலோ.3:9&10 பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு,… புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. இதில்,

  1. பழைய மனுஷன்
  2. புதிய மனுஷன்

எனப் பார்க்கிறோம். 1கொரி15:44-ல்

  1. ஜென்ம சரீரம்
  2. ஆவிக்குரிய சரீரம்

என இரண்டு சரீரத்தைக் குறித்து பவுல் சொல்லியிருக்கிறார்.
மறுரூபமாகுதலின் சில காரியங்களை மேற்கண்ட வசனங்களின் மூலம் தியானிப்போம்.
2 கொரிந்தியா் 4:16. ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
உள்ளான மனிதன் புதிதாக்கப்பட, புறம்பான மனிதன் அழிக்கப்பட வேண்டும். புறம்பான மனிதன் என்பது, நமது சரீரபிரகாரமான காரியங்களை குறிக்கிறது. எபேசியர் 2:2&3 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

இவ்வுலக வழக்கப்படி நடப்பதை விட வேண்டும்
ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,… இவ்வுலகில் வாழ்கிற நாம், உலகத்திற்கேற்றபடி நடக்க கூடாது. நாள், நட்சத்திரம் பார்ப்பது, சம்பிரதாயங்கள், சடங்காசாரங்களை விட்டு விட்டு, தேவனுக்கு பிரியமாக நடக்க வேண்டும்.

ஆகாயத்துப் பிரபுவின் ஆவியின் படி நடந்து, கீழ்படியாதவர்களாக இருக்க கூடாது.
எபே.6:12 வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் போராட்டத்தினால், மேற்கொள்ள முடியாமல் போவதற்கு காரணம், கீழ்படியாமை. எரேமியா 22:21 உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற் போகிறதே உன் வழக்கம். இந்த நம் வழக்கத்தை மாற்றி, கர்த்தரின் சத்தத்துக்குக் கீழ்படிவது அவசியம்.

மாம்சத்தின் படி நடக்க கூடாது.
நமது மாம்ச இச்சையின்டியே, மனதும், மாம்சமும் விரும்பியபடி செய்து வந்த நாம், அதைவிட வேண்டும். ரோமா்7:5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.

ஆம், மாம்ச இச்சை மரணத்துக்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கும். மேலும், ரோமா் 8:8&9 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ஆம், நாம் தேவனுக்கு பிரியமானவர்களாய் நடக்கும்படி, மாம்சத்திற்கு உட்பட்டவர்களாக நடவாமல், ஆவிக்குட்பட்டவர்களாக நடப்போம்.
இவ்விதமாய் புறம்பான மனுஷனின் கிரியைகளை அழித்து, உள்ளான மனுஷனில் புதிதாக்கப்படுவோம். ஆமென்.

Categories: Messges