கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 5
இன்றைய தியானம்

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
லூக்கா 3:9
கனிகளை கொடுத்தல்
மத்தேயு 7:19-ல் இயேசு கிறிஸ்துவும், “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” என்று கூறினார்.
நல்ல கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். நாம் கனிகளை கொடுக்கும்படி, கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (யோவான்15:16) மட்டுமல்ல, நம்மை கனிகளை கொடுக்கும் செடியாக வைத்திருக்கிறார். எரேமியா 2:21. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
ஆம் கர்த்தர் நம்மை நற்கனி திராட்சை செடியாக வைத்திருக்கிறார். நல்ல கனிகளை கொடுக்கும் செடி எப்படி இருக்க வேண்டும் என தியானிப்போம்.
1. மறுரூபமாக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
மத்தேயு7:15-17 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
உள்ளத்தில் ஓநாய்களை போல கபடம், வெளியே ஆட்டுத் தோல் போர்த்திய நல்ல மனிதர்களைப் போன்ற வேஷம். ரோமர் 12:2. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
மறுரூபமாக்கப்பட்ட வாழ்வுதான் நற்கனி தரும் வாழ்வு.
2. பரலோக ஞானம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்
யாக்கோபு 3:17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
பரலோக ஞானம் நற்கனிகளால் நிறைந்தது. உலக ஞானத்தை அடைய பிரயாசப்படுகிற நாம் பரலோக ஞானம் பெற என்ன செய்கிறோம். ஆதியாகமம் 41:38&39. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
ஆம் பரிசுத்த ஆவியானவர் மூலம் பரலோக ஞானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
3. நமக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளை மட்டும் உபயோகப்படுத்தல் வேண்டும்
நியாயாதிபதிகள், 9:12&13. அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
திராட்சை செடியின் வேலை அரசாளுவது அல்ல; மாறாக அது தனது மதுரமான கனிகளையும், திராட்சரசத்தையும் கொடுக்கும். அவ்வண்ணமே நாமும் தேவன் நமக்கு கொடுத்த தாலந்துகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தேவையற்ற காரியங்களில் ஈடுபட கூடாது. 2தீமோத்தேயு 2:4. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
ஆம், வேறு காரியங்களில் சிக்கிக் கொள்ளாமல், நமக்கு நியமிக்கப்பட்டதை செய்வோம்.
ஆம், மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையாகிய நற்கனிகளைக் கொடுக்கவும், பரலோக ஞானத்தை பெற்று, நற்கனிகளைக் கொடுக்கவும், வேறு காரியங்களில் சிக்கிக் கொள்ளாமல், பெற்றுக் கொண்ட தாலந்துகளை பயன்படுத்தி நற்கனிகளைக் கொடுக்கவும் கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக. ஆமென்.